Thursday, March 5, 2009

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

குர்ஆனில் முரண்பாடா?
கிறிஸ்தவ தளத்துக்கு பதில்
பைபிளில் உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் முஸ்லிம்களால் சுட்டிக்காட்டப்படுவதை நியாய உணர்வுடன் சிந்திக்க மனமில்லாமல் அதை எப்படியாவது மறுத்தாகவேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ மிஷினரிகள் குர்ஆனில் ஏதேனும் முரண்பாடு கிடைக்குமா என்று தேடத்தொடங்கியதன் விளைவு, தற்போது நோவாவின் வரலாற்றில் குர்ஆன் முரண்படுகின்றது என்று எழுத தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடாகத்தான் 'குர்ஆனில் முரண்பாடு - நோவாவின் வயது?' என்று அவர்களால் சமீபத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த பதிவு எந்த அளவுக்கு பலவீனமான வாதங்களை கொண்டிருந்தது என்பதை எமது பதில் பதிவான 'நோவாவின் வயது? குர்ஆனில் முரண்பாடா? என்ற கட்டுரையின் மூலம் விளக்கமளித்திருந்தோம். அதே போன்று அதே நோவாவின் வரலாற்றில் மற்றுமொரு குழப்பம் இருக்கின்றது என்று மேலும் ஒரு பதிவை ஆங்கிலத்தளத்திலிருந்து மொழிப்பெயர்த்து தமிழில் வெளியிட்டிருக்கின்றனர். அதுவும் எந்த அளவுக்கு பலவீனமான வாதத்தைக் கொண்டுள்ளது என்பதை இனி பார்ப்போம்:

அல்லாஹ் தனது திருமறைக்குர்ஆனில் நூஹ் (அலை) அவர்களின காலத்தில் நடந்த சம்பவத்தை பின்வருமாறு கூறுகின்றான்:

இன்னும்; நூஹின் சமூகத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம். -அல்குர்ஆன் 25:37

மற்றோர் வசனத்தில்: நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள். - அல்குர்ஆன் 26:105

இந்த வசனங்களில் இறைவன் நூஹ் நபியுடைய காலத்தவர்கள் இறைத்தூதர்களைப் பொய்ப்பித்தனர் என்று பன்மையாக கூறுகின்றான்.

இதைப்பற்றி உமர் என்ற கிறிஸ்தவர் எழுதும் போது:

நோவாவின் சமுகத்தார்கள் நிராகரித்த இந்த இதர தூதர்கள் யார்?

பைபிள் நோவாவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதில்லை. குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.

இப்படி குறிப்பிட்டு விட்டு கீழ்கானும் வசனத்தைக் கேடிட்டுக்காட்டி அதன் மூலம் ஒரு கேள்வியையும் முன் வைக்கின்றார்:

இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்;. அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம். (குர்ஆன் 21:76)

மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். -அல்குர்ஆன் 37:77

இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?

இது தான் இவரது கேள்வி. இந்தக் கேள்வியின் மூலம் இவரது அறியாமை வெளிக்காட்டப்படுவதுடன் - குர்ஆனை எப்படியேனும் குற்றம் சுமத்தியாகவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மட்டுமே இந்தக் கேள்வி கேட்கப்படுகின்றது என்பதும் தெளிவாக விளங்கும். எனினும் இவரது இந்தக் கேள்விக்கு பதில் மிக எளிதானது. ஏனெனில் 'தூதர்கள்' என்றால் யார் யார்? தூதர்கள் என்று பன்மையாக சொல்லப்படுவது ஏன்? என்று விளங்கிக் கொண்டால் பதில் கிடைத்துவிடும்.